பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (1876 - 1954)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27-ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர்
இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் "கவிமணி" யாவர். நாகர்கோவிலுக்கருகில் உள்ள தேரூரில் தோன்றியவர். முறையாகத் தமிழ் பயின்று தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். இவர்தம் தித்திக்கும் தேன்சுவைக் கவிதைகள் "மலரும் மாலையும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. உமர்கய்யாமின் பாடல்களைத் தமிழில் சுவைபடப் பாடியுள்ளார். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார். "தாந்தளூர்ச் சாலை" என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் முன்னே பிறந்தவர். பாரதியின் வாழ்வுக் காலம் கவிமணியின் வாழ்வுக் காலத்திற்குள் அடங்குகின்றது. 1882 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பாரதியாரின் கவிதைகள் மக்களிடையே பெற்ற அத்துணைச் செல்வாக்கை கவிமணியின் பாடல்கள் பெற்றதாகத் தெரியவில்லை. இன்றும் இந்நிலைமையே தொடர்கிறது. இதற்குக் காரணம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த உரிமை வேட்கை பாரதியின் உள்ளத்தைத் தாக்கிக் கனல் கக்கும் தேசியப் பாடல்களை வெளிக் கொணர்ந்தது.
விடுதலை அரசியல் வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் சொல், செயல் வடிவம் கொடுத்தது தமிழ்க்கவிதை வரலாற்றில் பாரதி ஒரு திருப்பு மையமாகவே மாறினார். கவிமணி விடுதலைப் போராட்டம் அல்லாத சமயம், சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். எனினும் அவர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாததாலோ அல்லது புரட்சிக் கனல் கக்கும் விடுதலைப் பாடல்கள் பாடாததாலோ பாரதியைப் போற்றிய அளவுக்குக் கவிமணியை மக்கள் போற்றத் தவறிவிட்டனர்.

மலரும் மாலையும் Download
மனோன்மணீயம் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,